10. ஷோபனம் சொன்ன வாயு மைந்தனை ராகம்: ஆனந்த பைரவி தாளம்: ஆதி

ஷோபனம் சொன்ன / வாயு மைந்தனை

ஶ்ரீதேவி ஒரு வரம் / கேட்கப் பணித்தாள்

காவலிருந்த கொடிய / அரக்கிகளைக் கொல்ல

அனுமதி கோரினான் / ஆஞ்சனேயன்

இட்ட பணி செய்தவரை / நொந்து கொள்ளல் தகாது

அவர்களை ரக்‌ஷி என / உரைத்தாள் ஜானகி

கோராதவரையும் / காக்கும் அந்த உத்தமியின்

செங்கமலப் பாதங்களில் / பணிந்தான் அனுமான்

Advertisements

9. ராகவனின் வெற்றியை ராகம்: ஷண்முகப்பிரியா (அ) ரீதிகௌளை தாளம்: ஆதி

 

ராகவனின் வெற்றியை / தேவியிடம் பறை சாற்ற

அனுமனை அல்லாது / வேறெவரும் உண்டோ

 

சீதையிடம் இனிய / செய்தி சொன்ன கபி ராஜன்

அன்னையின் திருவாக்கை எதிர் நோக்கி நின்றான்

 

பரமானந்தத்தால் / பேசாத மைத்திலி

க்ருதக்ஞதையால் தன் / கரங்களைக் குவித்தாள்

அக்கணமே மாருதி / பெரும் புகழை அடைந்து

ராமனிடம் இட்டுச் செல்லும் / சிறிய திருவடி ஆனான்

8. இராகவனையும் இலக்குவனையும் ராகம்: ஸரஸ்வதி தாளம்: ரூபகம்

இராகவனையும் இலக்குவனையும்

காண வந்தான் வீர ஹனுமான்

 

தன்னை அறிமுகம் செய்து கொண்ட

கபியின் உயர் தோற்றத்தை நோக்கியும்

அவன் தன் வார்த்தை கேட்டும் ராமன்

ப்ரமிப்பில் ஆழ்ந்து மயங்கி நின்றான்

 

நான்கு வேதம் அறிந்து வ்யாகரணமும் கற்று

தெளிந்த வானரோத்தமன் என புகழ்ந்து மகிழ்ந்தான்

ஆயிர நாவுடை ஆதிசேஷனை, இவ்வாக்மியிடம்

பார்த்துப் பேசென அறிவுருத்தினான்

7. அஞ்சனை மைந்தன் ராகம்: ஹிந்தோளம் தாளம்: ஆதி

 

அஞ்சனை மைந்தன் / ராமாயணம் சொல்லி

உயிர் காத்துகந்தது / இரு முறை நிகழ்ந்தது

 

சீதையிடம் சேதி சொல்ல / சென்ற வீர வானரன்

அவள் தூக்கிட முயல்வதை / கண்டு அதிர்ந்தான்

மெல்லிய குரலில் / ராம கதை இசைத்து

அவள் உயிரினைக் காத்த / புண்ணியன் ஆனான்

 

பதினான்காண்டுகள் ஆன பின்பும் / ராமனைக்

காணாத பரத நம்பி / தீக்குளிக்க யத்தனித்தான்

பலபீமன் ராம தூதினை / பாடி அங்கு குதிக்க

பரதன் உயிர் தரித்து / நன்றி நவின்றான்

6. ஶ்ரீ என்ற தாயாரின் மகிமை  ராகம்: ஶ்ரீ தாளம்: ஆதி

 

ஶ்ரீ என்ற தாயாரின் / மகிமை சொல்லி மாளாதே

மாதவள் தன் அருளாலே / வையம் உய்ந்து போகுதே

 

பாற்கடலில் தோன்றி / பரமனின் வல மார்பினில்

வாழ்கின்ற மங்கையின் / கடாக்‌ஷம் அரியதே

 

அபராதங்களை / க்‌ஷமிக்கத் தூண்டி

மோக்‌ஷம் அருள தன் / கேள்வனை வேண்டி

அனைவர்க்கும் புருஷகாரம் / செய்கின்ற அவளின்

செந்தாமரைப் பாதமே / நமக்கென்றும் உரியதே

5. ஓ ஹனுமானே! ராகம்: பெஹாக் தாளம்: ஆதி

 

ஓ ஹனுமானே ஒரு / அந்தண ரூபத்தை

சுக்ரீவன் வேவுக்கென / தரித்துச் சென்றாயே

 

கல்மிஷ எண்ணத்துடன் / ரகு வம்ச திலதர்களை

நோக்கி நீயும் அடிகளை / வைத்துப் போனாயே

 

அழகன் இராமனைக் / கண்டவுடன் ப்ரமித்து

பொய்யுரைக்க ஒண்ணாமல் / சமைந்து நின்றாயே

எம்புருகிப் போய் / கண்ணீர் பெருகியோட

முழுமுதலைக் கண்டேன் / என்றே களித்துகந்தாயே

 

“நானே ஹனுமான் / சுக்கிரீவன் மந்த்ரி” என்று

மெய்யாக உன்னை அறிமுகம் / செய்து கொண்டாயே

உன் பேச்சில் மயங்கி / உற்று நோக்கிய இராமனை

கண்ணாரக் கண்டு அவன் / தன் அன்பன் ஆனாயே

4. சுந்தர வானரன் சுந்தரனின் தூதனாய் ராகம்: மோஹனம் தாளம்: ஆதி

4. சுந்தர வானரன் சுந்தரனின் தூதனாய்  ராகம்: மோஹனம்  தாளம்: ஆதி

சுந்தர வானரன் / சுந்தரனின் தூதனாய்

சுந்தரியைத் தேடி / சுந்தரபுரி அடைந்தான்

 

எங்கும் திரிந்தோடியும் / அன்னையைக் காணாமல்

மூலையில் சென்றமர்ந்து / சிந்தனத்தில் ஆழ்ந்தான்

 

தன் முயற்சியில் செய்தோம் / என்ற எண்ணம் தவறென

உணர்ந்து தெளிந்தான் / அந்த குரக்கின வீரன்

தேவி தேவரீரே உம்மைக் / காட்டும் என ப்ரார்த்திக்க

உடன் அந்த கற்பின் கனலை / கண்ணுற்றுக் களித்தான் 

 

ஸ்வப் ப்ரயத்னம் கொண்டு / பரமனை அடைதல் 

சாத்தியப் படுவது / துர்லபம் என்றுணர்த்தி 

“நின் சொத்தான அடியேனை / நீரே ஆட்கொள்ளும் என

ஆறிய சரணாகதியே / பலிக்கும் எனக் காட்டினான்

மனமே ஏன் இந்த வீணான சஞ்சலமே ராகம்: நளினகாந்தி தாளம்: ஆதி

3.

மனமே ஏன் இந்த வீணான சஞ்சலமே  ராகம்: நளினகாந்தி  தாளம்: ஆதி

மனமே ஏன் இந்த / வீணான சஞ்சலமே

மாருதியை ஸ்மரித்தால் நல் / மோக்‌ஷ கதி பெறலாமே

பரமன் இராமனை / சீதைக்குணர்த்திக் காட்டி

ஆச்சார்யனாய் உயர்ந்தான் / சிறிய தருவடி

ஜீவாத்மாக்கள் தங்கள் / நிலையினை அறிவதில்லை

பரமாத்மாவை என்றும் / நினைக்கவும் விழைவதில்லை

இவ்வறியாமை போக்கி / ஞானம் அளிப்பான்

ராகவனின் அருமை / தூதனான ஹனுமான்

பஞ்ச முக ஹனுமான் அருள் புரிவான்

பஞ்ச முக ஹனுமான்/ அருள் புரிவான் ராகம்: லதாங்கி   தாளம்: ஆதி

பஞ்ச முக ஹனுமான்/ அருள் புரிவான்

இனிய பழம் ஈந்து/ ஆட்கொள்ளுவான்

 

தானான சிரத்தை/ நடுவினில் கொண்டான்

இட புறத்தில் சிங்க/ குதிரை முகங்கள் வைத்தான்

வலப்புறம் கருட/ பன்றி வதனம் ஏந்தி

பத்து கரங்களுடன்/ காட்சி அளிப்பான்

 

கிழக்கில் ஹனுமன் முகம்/ பாவங்களை ஒழித்து

தெள்ளிய புத்தியை/ அள்ளிக் கொடுக்கும்

தெற்கில் நரசிங்கம்/ எதிரி பயம் போக்கி

அனைத்திலும் வெற்றியை/ அருளிச் செய்யும்

 

மேற்கில் கருட முகம்/ கொடிய வினைகள் நீக்கி

ப்ரேத பிசாசத்தின்/ விஷங்களை முறிக்கும்

வடக்கில் வராஹம்/ க்ரஹ தோஷம் களைந்து

எல்லா நலங்களையும்/ அள்ளித் தெளித்திடும்

 

மேலே நோக்கும்/ ஹயக்கிரீவரின் முகம்

கல்வி, ஞான, வெற்றியுடன்/ நற்குடும்பமும் அருளும்

இவ்வைந்து முகங்களையும்/ ஒருங்கே சேவித்து

இம்மையிலும் மறுமையிலும்/ களிப்பெய்துவோம்.